×

ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை மருது அழகுராஜா அவமானப்படுத்துகிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜா ஓபிஎஸ் பக்கம் சாய்ந்துவிட்டார் என்றும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் அவர் செயல்படுகிறார் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
சட்டதிட்டங்களின்படி அதிமுக பொதுக்குழு முறையாக நடந்தது. பொதுக்குழு உறுப்பினர்களை அவமானப்படுத்தும் வகையில் மருது அழகுராஜ் செயல்பட்டு வருகிறார். நமது அம்மா நாளிதழில் முறைகேடு செய்ததால் ஒதுக்கி வைக்கப்பட்டவர். ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சாய்ந்து கொண்டு கூலிக்கு மாறடித்து வருகிறார். அதிமுக சட்டதிட்ட விதிமுறைகளின்படி தான் அனைத்தும் நடக்கிறது. எங்கள் பக்கம் நியாயம் உள்ளதால் நிச்சயம் நல்ல தீர்ப்பை நீதிமன்றம் அளிக்கும் என்று நம்புகிறோம்.

கொடநாடு கொலை பற்றி சந்தேகம் எழுப்புகிறார். கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போர்க்கால அடிப்படையில் கண்டுபிடித்து கைது செய்தவர் எடப்பாடி பழனிசாமி.  டிடிவி.தினகரனை ரகசியமாக சந்தித்தது ஏன். ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவிற்கு நல்ல சர்டிபிகேட் கொடுத்து விட்டு வந்தவர் ஓ.பன்னீர்செல்வம். தனிப்பட்ட முறையில் சசிகலாவை தனக்கு பிடிக்கும் என்று சொன்னதும் அவர்தான். ஜெயலலிதா மரணத்தில் தனக்கு சந்தேகம் இல்லை என்று சொன்னதும் ஓ.பன்னீர்செல்வம்தான்.  இவ்வாறு அவர் கூறினார்.

டீசல் விற்கும் விலையில் சுற்றுப்பயணம் தேவையா?
சசிகலா குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு: சசிகலாவை என்ன செய்வது. ஓநாய்க்கு ஓநாய் புத்திதான் வரும். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுமாம். எங்களை பொறுத்தவரையில் அவர்கள் எல்லாம் விலக்கப்பட்ட சக்திகள். தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். ஆள் ஆளுக்கு ஒரு வேன் எடுத்துக் கொண்டு டூர் போகிறார்கள். இன்றைக்கு டீசல் விற்கும் நிலையில் இது எல்லாம் தேவையா. இதனால் ஒரு தாக்கமும் ஏற்படப்போவதில்லை.

வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் ஓபிஎஸ்
அதிமுகவைப் பொறுத்தவரையில் இரண்டு நிலைகள். ஒன்று ஒற்றைத் தலைமை. இரண்டாவது சசிகலா மற்றும் டிடிவி.தினகரனை எந்த நிலையிலும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது. ஓ.பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒதுக்கி வைக்கவில்லை. பொதுக்குழு யாரை ஏற்றுக்கொள்கிறதோ அவரை ஏற்கட்டும். இதுதானே முறை. 5 சதவீத ஆதரவு கூட இல்லாமல் இப்படி வானத்திற்கும், பூமிக்கும் குதித்தால் எள்ளி நகையாடக்கூடிய விஷயம் தான்.

Tags : Maruthu Akurraja ,AIADMK ,OPS ,Ex ,minister ,Jayakumar , OPS, AIADMK general committee member, Maruthu Agarraja, former minister Jayakumar allegation
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மனைவியிடம் மோசடி முயற்சி